Saturday, May 16, 2009

நிலா என் தோழி

நினைவில் ஒளிர்கிறது எங்கள் நட்பு பிறந்து வளர்ந்த நாட்கள். ஒரு நாள் என் அன்னை நிலவைக் காட்டி உணவு ஊட்டினாள். நிறைந்த அவள் முழு முகம் மீது நிலைத்தப் பார்வை நீங்காது கூறினேன், "எத்தனை அழகம்மா இந்த நிலவு". என் மீது நிலைத்தப் பார்வை நீங்காது அவள் கூறினாள், "ஆம் கண்ணே உன்னைப் போல". மகிழ்ந்தது என் மனம்.

என் போல் இருக்கும் அவள் நட்பை விரும்பினேன். குளிர் தென்றல் வீசும் இரவில் மாடிக்கு சென்று அவளைக் காண்பேன். அவள் வீசும் பால் ஒளியில் மனம் கறைந்து நிற்பேன். சில நாட்கள் கழித்து அவளுடன் பேச ஆரம்பித்தேன். நானும் அவளைப் போல் தான் என்று கூறினேன். அவள் புன்னகை அதை அங்கீகரித்தது. சில நாட்களில் அவள் தோற்றம் மாறியது.

தினமும் எனக்கு முன்பே வந்து எனக்காக காத்திருக்கும் அவள் ஒரு நாள் நான் வந்து பல நேரம் ஆகியும் வரவில்லை. சந்தேகத்துடன் பக்கத்து வீட்டு மாடிக்குச் சென்றுப் பார்த்தேன். அங்கிருந்தும் அவள் தென்படவில்லை. அழுது கொண்டே உறங்கி விட்டேன்.

அடுத்த நாள் முழுதும் மனம் சோர்ந்து இருந்தேன். மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும் மாடிக்குச் சென்று விட்டேன். மங்காத வெளிச்சத்தில் எல்லா திசைகளிலும் தேடினேன். உடம்பு சரியில்லாமல் இருக்குமோ? அல்லது ஊருக்கு எங்கேயாவது சென்றிருப்பாளோ? என்று யோசித்தேன். வெளிச்சம் மங்கி இருள் கவ்விய பின்பும் அவள் வரவில்லை. துக்கம் தொண்டையை அடைத்து நின்றேன். பின்பு கோபம் கொண்டு கூறிக்கொண்டேன். இனி அவளைக் காண வரமாட்டேன் என்று.

மறு நாள் அவளை மறந்து பக்கத்து வீட்டு தோழிகளுடன் விளையாடினேன். மீண்டும் உணவு நேரம் அவள் நினைவு வர மாடிக்குச் சென்றேன். சிறு கீற்று போல தெரிந்த அவளைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தேன். என் என்னைக் காண வரவில்லை என்று கேட்டேன். மனதில் தோன்றிய எண்ணம் எல்லாம் சொன்னேன். மாதம் ஒரு முறை நாங்கள் இவ்வாரு சண்டைப் போட்டுக் கொள்வது வழக்கமாகி விட்டது.

வருடங்கள் செல்லச்செல்ல அவள் இயல்புகளையும் தன்மைகளையும் பாடங்கள் மூலம் அறிந்து கொண்டேன். ஆயினும் எங்கள் நட்புணர்வில் எந்த மாற்றமும் இல்லை. என் எண்ணங்கள், கனவுகள், லட்சியங்கள் அனைத்தயும் அறிந்தவள் அவள். நான் கூரும் அனைத்தயும் புன்னகையுடன் கேட்பாள். அவள் எண்ண அலைகளை ஒளி அலைகளாய் உதிர்ப்பாள். நான் எங்கு சென்றாலும் என்னுடன் வருவாள். தொலைவில் இருந்தாலும் என் மனதிற்கு நெருங்கிய தோழி அவள்.

அவள் என்னைப் போல !!!

Friday, May 15, 2009

கோடை மழை

பச்சை மண் மணம் பரப்ப
மலர்கள் மகிழ்ச்சியில் இன்னும் மலர
கொதித்த தென்றல் குளிர்ச்சி கொள்ள
சலித்த கண்கள் களிப்படைய

இடிகள் மேளம் கொட்ட
மின்னல் படம் பிடிக்க
நித்தில மணிகளாய்
இசைந்து பொழிந்தது

கோடை மழை!!!

Calm through Art

Naan(I) When I studied 11th, amma asked me if I wanted to study architecture. I drew a straight line and she said, “Ok forget it”.  Choosing...