குரங்கு மனம்!
இடையுறாது ஓடிய ஆற்று வெள்ளம்,
பாதையில் உள்ள குட்டையில் சிறிதுத் தேங்கியது போல்,
இல்லம், அலுவல் என்று ஓடியிருந்த
வாழ்க்கையில், சிறிது தனிமை!
தனிமையைக் கண்டதும்,
இறந்தும் இறவாத காலம்,
நிகழ்வுகள் புரியாத காலம்,
எதிர்ப்பார்ப்புகள் நிறைந்த காலம், என்று,
மாறிமாறித் தாவியிருந்தது
குரங்கு மனம்!
குரங்கு மனதை கொட்டி அமர்த்த இயலாது,
அதன் வழியில் விட்டேன்!
வாழ்வில் கிடைத்த அன்பையும், சிறு வெற்றிகளையும்,
நினைத்துப் பூரித்து உறங்கியது சில நாட்கள்!
தான் அடைந்த காயங்களையும், பெருந்தோல்விகளையும் விட,
தான் செய்த காயங்களால், கணத்து,
உறங்காமல் தவித்தது சில நாட்கள்!
வாழ்க்கையின் பயன் என்ன? செல்லும் வழி என்ன?
என்று குழம்பியிருந்தது சில நாட்கள்!
குட்டை நீர் ஆறாக மீண்டும் ஓடும் நாள் நெருங்க,
அன்புடன் கடமையைச் செய்து,
நட்பு வளர்த்து, நல்லன செய்வோம்!
மற்றவை இறைவன் வழி என்று,
தெளிவுடன் ஓர் இடம் அமர்ந்தது,
குரங்கு மனம்!
No comments:
Post a Comment